Sunday, April 26, 2009

விடுதலையான உதயன் ஆசிரியரின் பேனாவிலிருந்து...


அன்புமிக்க வாசகப் பெருமக்களே! நீண்ட எட்டு வாரகால தடுப்புக் காவலில் இருந்து நான் மீண்டுள்ள நிலையில் சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வது பொருத்தமானது என்று நினைக்கின்றேன். வெள்ளை வானில் வந்த ஆயுத பாணிகளின் அராஜகப் பிடியில் சிக்கி, கண்கள் கட்டப்பட்டு, பின்பக்கம் மடக்கிக் கைவிலங்கிடப்பட்டு, தாக்குதல்களுக்கு இலக்காகி அவலப்பட்ட அந்த இரண்டு மணிநேரக் கொடூரமும் பின்னர் அக்கடத்தல், "கைது" ஆக மாற்றப்பட்டு தடுப்புக் காவலில் அனுபவிக்க நேர்ந்த இரண்டு மாத கால அவஸ்தையும் ஒருவாறு இப்போதைக்கு முடிவுக்கு வந்திருப்பதாகக் கருதுகிறேன்.

அடிப்படையோ, ஆதாரமோ அற்ற அபத்தக் குற்றச்சாட்டுகளின் பேரில் தமிழ்ப் பத்திரிகை உலகின் மூத்த பத்திரிகையாசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு இரண்டு மாத காலத்துக்கு அநியாயமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்திருக்கின்றார் என்பது இன்று அப்பட்டமாகி யிருக்கின்றது; அம்பலமாகியிருக்கின்றது.

இந்தக் கைதும், அது இடம்பெற்ற முறையும், இடம்பெற்ற வேளையும், அதையொட்டி என்மீது அதிகார வர்க்கத்தினால் அபாண்டமாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளும், இவ் விடயத்தையொட்டிய விசாரணைகள் சுமார் இரண்டு மாத காலத்துக்கு இழுத்தடிக்கப்பட்ட போக்கும் இந்த அதிகார அராஜக அத்து மீறலின் பின்னணியில் அரசியல் உள் நோக்கமும் பழிவாங்கலும் பிரதான காரணங்களாக இருந்தன என்பதைத் தெளிவுபடுத்தப் போதுமானவை.

பிரிட்டிஷ் காலனித்துவப் பிடியிலிருந்து இலங்கை விடுவிக்கப்பட்ட பின்னர், இலங்கைத் தமிழர்கள் வரலாற்றில் மிக மோசமான மிகக் கொடூரமான மிகக்கோரமான பேரவலத்தையும் பேரனர்த்தத்தையும் சந்தித்துக் கொண்டிருக்கும் பெருந்துயர்மிக்க இச்சமயத்தில்,

இந்தக் கொடூரங்கள் குறித்து சர்வதேச சமூகம் உன்னிப்பாகவும், கூர்ந்தும் அவதானிக்க வேண்டிய அவசரமும் அவசியமும் எழுந்துள்ள இச்சூழலில் தம் இன மக்களின் பேரவலம் பற்றிய உண்மை நிலையையும் யதார்த்தத்தையும் உலகுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் முரசறைந்து உணர்த்தும் களப்பணியில் வர லாற்றுப் பொறுப்பில் கண்துஞ்சாது ஈடுபட்டிருக்க வேண்டிய ஒரு பத்திரிகை ஆசிரியர், அச்சமயத்தில் அப்பணியில் ஈடுபடவிடாது திட்டமிடப்பட்ட வகையில் தடுக்கப்படும் விதத்தில் தடுப்புக்காவலில் கம்பி எண்ணவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றார்.

இனப்பிரச்சினையையொட்டிய யுத்தம் தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ள இச் சமயத்தில் அது குறித்து சர்வதேச ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இராஜதந்திரிகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும், களநிலைமை பற்றிய தகவல்களை அறிந்துகொள்ளக்கூடிய செய்தி மூலமாகத் திகழ்பவர்கள் என்போன்ற ஊடக உயர் மட்டத்தினரே என்பது வெளிப்படையானது.

அத்தகைய முக்கிய பொறுப்பில் இருப்பவரை இச்சமயத்தில் அபத்தமான குற்றச் சாட்டுகளின் பேரில் கைது செய்து தடுப்புக்காவலில் வைத்திருந்தமையும்
அந்தக் கைதையொட்டி அதிகார வர்க்கத்தினர் கிளப்பிவிட்ட "புலித்தொடர்பு" என்ற கற்பனைக் குற்றச்சாட்டும் இந்தக் கைதுத் திருவிளையாடலின் பின்னணியில் புதைந்து கிடக்கக்கூடிய உண்மைகளையும் நோக்கங்களையும் நீங்களே ஊகித்துக்கொள்ளப் போதுமானவை எனக் கருதுகிறேன்.

கடந்த பெப்ரவரி 20ஆம் திகதி கொழும்பு வரை தமது விமானத்தில் வந்து தாக்குதல் நடத்திய புலிகளின் நடவடிக்கையுடன் நான் தொடர்புபட்டிருந்தேன் என்பதே அரசின் அதிகார தலைமையினால் என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு.

ஓர் ஊடகவியலாளன் என்ற முறையில் இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக, செய்தித் தரப்புகளோடு தொடர்பு கொண்டு, தகவல்களைச் சேகரித்து வெளியிட்டமை தவிர அதற்கு அப்பால் இவ்விடயத்தில் நான் சம்பந்தப்படவுமில்லை; அத்துமீறிச் செயற்படவுமில்லை.

இப்போது அது விசாரணைகளில் தெட்டத் தெளிவாக உறுதிப்படுத்தப் பட்டிருக்கின்றது; உண்மை வெளியாகியிருக்கின்றது.

எம்மைப் பொறுத்த வரையில் செய்தியாளர்கள் என்ற முறையில், அரச மற்றும் படை உயர் மட்டங்களில் இருந்து, ஏனைய அனைத்துத் தரப்பினர்களுடனும் செய்திகளுக்காகத் தொடர்புகளை பேணுவது எமது தவிர்க்க முடியாத பணியாகிறது. அத்தகைய கடமைப் பொறுப்புகளுக்கப்பால் எத்தகைய தவறான அல்லது சட்ட விரோதமான செயற்பாடுகளையும் நான் மேற்கொள்ளவில்லை என்பதே உண்மையானதாகும்.

அன்றையதினம் எனக்கு வந்த அல்லது நான் மேற்கொண்ட தொலைபேசி அழைப்புகள் குறித்தே முதலில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் உள்ளூரிலும், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இருந்து வந்த அல்லது நான் அவற்றுக்கு மேற்கொண்ட சுமார் இருநூறு வரையான தொலைபேசி அழைப்புக்களின் மூலத்தைக் கண்டறிவதற்கு மிஞ்சி, மிஞ்சிப் போனால் ஒருவாரகால அவகாசம் அதிகம்.

ஆனால் அந்த ஒரு வார காலத்துக்குள்ளேயே மேற்படி தாக்குதல் சம்பவ சமயத்திலோ அல்லது அதற்கு முன்னர் சுமார் இரண்டு மாத காலத்திலோ குற்றமிழைக்கப்பட்டதாகக் கருதப்படக்கூடிய தொலைபேசி அழைப்புகளுடன் நான் சம்பந்தப்பட்டேன் என்று சந்தேகிப்பதற்கான ஆதாரங்கள் ஏதுமே இல்லை என்பதை என்னை விசாரணை செய்த பொலிஸார் உறுதிப்படுத்திக்கொண்டு விட்டனர்.

தொலைபேசி அழைப்புகள் பற்றிய விசாரணை முடிந்ததும் எனது வங்கிக் கணக்குகள் துருவப்பட்டன. எனது மனைவியின் வங்கிக் கணக்குகள் ஆராயப்பட்டன. "பயங்கரவாதிகள்" மூலம் தவறான வழியில் நான் வருமானம் ஏதும் ஈட்டிக்கொண்டேனா என்பதைக் கண்டறிய எனது சொத்துக்கள், உடைமைகள் ஆய்வு செய்யப்பட்டன. நான் விற்ற, வாங்கிய சொத்துகள் குறித்தெல்லாம் விசாரிக்கப்பட்டது.

1990ஆம் ஆண்டு முதல் இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற சகல சமாதானப் பேச்சுகளின் போதும் ஊடகவியலாளன் என்ற முறையில் நேரில் பிரசன்னமாகி செய்தி சேகரிக்கும் தனித்துவமான வாய்ப்பு எனக்குக் கிட்டி வந்திருக்கின்றது. இதற்காக அவ்வப்போது பல்வேறு நாடுகளுக்கும் பல தடவைகள் பயணம் செய்திருக்கின்றேன். தவிரவும் மூத்த ஊடகவியலாளருள் ஒருவன் என்ற முறையில் பல்வேறு நாடுகளிலும் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்குபற்றியிருக்கின்றேன்.

இந்த வகையில் கடந்த ஏழு ஆண்டுகளில் நான் மேற்கொண்ட பல்வேறு வெளிநாட்டுப் பயணங்கள், அவற்றின் காரணங்கள், அதற்கான நிதி மூலம் குறித்தெல்லாம் துருவினார்கள்.
எதிலும் குற்றம் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த இரண்டு மாத காலத்தில் இலங்கைப் பாதுகாப்புப் பிரிவின் நான்கு புலனாய்வுத் துறைகளும் என்னைப் பற்றி நடத்திய விசாரணைகள் நான் குற்றவாளி அல்லன் என்பதை நிரூபித்தமையால் வேறு வழியின்றி வழக்கு ஏதும் தொடராமலேயே என்னை விடுவிக்க வேண்டிய நிலைக்கு ஆட்சித் தரப்பு தள்ளப்பட்டது.

என்னைப் "பயங்கரவாதி" ஆகப் பிரகடனப்படுத்தும் அதிகாரத் தரப்பின் பகிரங்கக் கருத்து வெளிப்பாடு, அவற்றின் பின்புலத்தில் புதைந்து கிடக்கும் சூக்குமங்கள், அபத்தமான குற்றச் சாட்டுகள் போன்றவை மொத்தத்தில் நகைப்புக்கிடமானவை. அவற்றை விவரிப்பின் அது நீண்டு செல்லும்.

எனக்கு நேர்ந்த இந்த அவலத்துக்காக யாரையும் பழிவாங்கும் வெஞ்சினம் எனக்குக் கிடையாது.

அத்தோடு இன்று எமது தமிழ்ச் சகோதரர்கள் அனுபவிக்கும் பேரின்னல்களுடன் ஒப்பிடுகையில் எனக்கு நேர்ந்த அவல அனுபவம் பெரும் சமுத்திரத்தில் ஒரு துளி மட்டுமே.
எனவே, தமிழர் தம் இக்கட்டான வரலாற்றுக் காலகட்டத்தில் ஓர் ஊடக நிறுவனமும் அதன் பொறுப்பான பணியாளர்களும் எதிர்கொண்டாக வேண்டிய கட்டாயங்களில் ஒன்றாக இதனைக் கருதி, எமது பணியைத் தொடர நாம் திடசங்கற்பம் கொள்வதே எமது கருத்தாக இருக்க வேண்டுமென நினைக்கிறேன்.

ஆனால், இத்தகைய அழுத்தந் தரும் அச்சுறுத்தல்களுக்கு ஊடகவியலாளர்கள் என்ற முறையில் நானும் "உதயன்", "சுடர்ஒளி" தினசரிகளில் என்னுடன் பணியாற்றும் எனது சக ஆசிரியபீட ஊழியர்களும், ஏனைய அலுவலர்களும் மற்றும் நிர்வாகத்தினரும் அவ்வப்போதும் தொடர்ந்தும் எம்மால் இயன்றவரை எமது கடமைகளைத் தொடர்வோம் என்று இந்தச் சந்தர்ப்பத்தில் உங்களுக்கு உறுதி கூறுகின்றேன்.

கொழும்பில் இரண்டு மாதகாலம் நான் தடுப்புக் காவலில் கைதியாக வைக்கப்பட்டிருந்தேன் என்பது உண்மைதான். ஆனால், யாழ்ப்பாணத்தில் தங்கள் உயிர்ப் பாதுகாப்புக்காக "உதயன்" ஆசிரியர் பீடத்தின் தூண்களான இரு உயர் அலுவலர்கள் கடந்த இரண்டரை வருடங்களாக "உதயன்" அலுவலகத்துக்குள் தங்களைத் தாங்களே முடக்கி சிறைக் கைதிகளாக வைத்துக்கொண்டு ஆற்றும் பணியில்தானே உங்கள் "உதயன்" திட்டமிடப்பட்டு, இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்களைக்கூட எதிர்கொண்ட பின்னரும் தவறாது வெளிவந்துகொண்டிருக்கின்றான் என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்றல்லவா?

நன்றி

இந்த நெருக்கடியான சமயத்திலும் எம்முடன் தோள் கொடுத்து ஆதரவு தந்த சகல அன்பு நெஞ்சங்களுக்கும் சிரம் தாழ்த்தி நன்றி கூறுகின்றேன்.

* எத்தகைய நெருக்கடி வரினும் அஞ்சாது பத்திரிகையைத் தவறாது வெளியிட வேண்டும் என்ற தமது நெஞ்சுரத்தை, படுகொலை இரத்தக் களரிகளுக்கு வழிவகுத்த அனர்த்த சம்பவங்களுக்கு நேரடியாக முகம் கொடுத்தசமயங்களில் கூடத் தயங்காது வெளிப்படுத்தி வரும் தமது வழமையான, துணிச்சல்மிக்க பாரம்பரியத்தை,எமது சக ஊழியர்கள் மீண்டும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

தமது ஆசிரியரை சீருடையினர் சகிதம் வெள்ளை வானில் வந்தோர் கடத்தி, அச்சுறுத்தி அதிர்ச்சி தந்த நிலையிலும் அவரைப் "பயங்கரவாதி" ஆகக் குற்றம் சுமத்தி முன்னிலைப்படுத்தியும்கூட தமது கடமையைத் தவறவிடாது தங்களை சுதாகரித்துக்கொண்டு ஒருநாள் பின்னடைவுதன்னும் காட்டாமல் அதே தரத்தோடும், வீச்சோடும், உறுதித் தெளிவோடும் இச்சமயத்தில் "உதயன்", "சுடர் ஒளி" நாளிதழ்களைத் தவறாமல் வெளியிடுவதை உறுதி செய்த தைரியம்மிக்க எமது நிறுவன நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும்

* தடுப்புக் காவலில் இருந்த என்னை நேரில் வந்து சந்தித்து உற்சாகப்படுத்திய பல்வேறு நாடுகளின் இராஜதந்திரிகள், அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் போன்றோருக்கும்

* நான் கடத்தப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டமையைக் கண்டித்து எனக்காகக் குரல் எழுப்பிய உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல்வாதிகள், ஊடக அமைப்புகள், மனித உரிமை இயக்கங்கள், பல் வேறு சமூக அமைப்புகள் ஆகிய தரப்பினருக்கும்

* என்னோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டமை தொடர்பான விசாரணைக்காகப் பொலிஸாருக்கு ஒத்துழைத்த எனது நண்பர்கள், செய்தி மூலகங்கள், உள்நாட்டு வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் போன்ற தரப்பினருக்கும்

* என்னுடைய வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து கிடைக்கப்பெற்ற கொடுப்பனவுகள் சம்பந்தமான விசாரணைகளை முன்னெடுக்க உதவிய "இன்டர்போல்" நிறுவனத்துக்கும்

*என்னுடைய விடுதலைக்காக வற்புறுத்தி அழுத்தம் கொடுத்த வெளிநாட்டுத் தூதரகங்கள், இராஜதந்திரிகள்

* இரண்டு மாதத் தடுப்புக் காவலின் போது என்னைக் கௌரவத்துடன் நடத்தி, மரியாதை பேணி, அனுசரித்து நடந்த கொண்ட கொழும்பு குற்றவியல் பிரிவு இயக்குநர் பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்க மற்றும் அவரின் கீழ் பணியாற்றிய பொலிஸ் குழுவினருக்கும்

* நான் தடுப்புக்காவலில் வாடிய வேளை எனது குடும்பத்தவர்களுடன் தொடர்பு கொண்டு தைரியமும், உற்சாகமும் ஊட்டி தார்மீக ஆதரவு தந்த உள்ளூர் நண்பர்கள், உறவினர்கள், வெளிநாட்டு ஆர்வலர்கள் மற்றும் அன்பர்கள்

அனைவருக்கும் எனது பணிவான நன்றிகள்.

உங்கள் ஆசி மற்றும் ஆதரவுடனும், "உதயன்", "சுடர்ஒளி" சக ஊழியர்களின் ஊக்கத்துடனும் எனது ஊடகப் பணி தொடரும் என உறுதி கூறுவதுடன், அதற்கு இறைவனின் அருளையும் இறைஞ்சுகின்றேன்.

ந.வித்தியாதரன்
(ஆசிரியர் "உதயன்", "சுடர்ஒளி")

No comments:

Post a Comment